சிறு தொழில் முயற்சியாளர்களின் சந்தைப்படுத்தல் வாய்ப்புக்களிளை விரிவுபடுத்தும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்


டிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital Marketing) என்பது இணையவழி சந்தைப்படுத்தல் எனவும் அழைக்கப்படும். இது ஒரு சந்தைக்கான வலையமைப்பினை மேம்படுத்தும் (Promotion)  உபாயம் (Technique)  ஆகும். இது இணையவழி மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் ஊடான விற்பனை மேம்படுத்தலுக்கான உபாயங்களை உள்ளடக்கியுள்ளது. டிஜிட்டல் சந்தைப்படுத்தலானது சந்தைப்படுத்தலுக்கான எல்லைகளை விரிவடையச் செய்துள்ளது எனலாம். அந்தவகையில் டிஜிட்டல் சந்தைப்படுத்தலுக்கான ஊடகங்கள் பின்வருமாறு:

  1. சமூக ஊடகங்கள் (Social Media)
  2. ஈ - மெயில் சந்தைப்படுத்தல் (E-Mail Marketing)
  3. இணைய வழி விற்பனைத் தளங்கள் (Digital Marketing Platforms)
  4. கையடக்கத் தொலைபேசிக் குறுஞ் செய்திகள்  (SMS)
  5. இணையத்தளங்கள் (Web Sites)
  6. கைத்தொலைபேசி செயலிகள்  (Mobile Apps)
  7. இணையவழி தேடுபொறிகள் (Online Search Engines - Google)
  8. டிஜிட்டல் ஆவணப்படுத்தல் (Content Marketing)

டிஜிட்டல் மார்க்கெட்டிங்  ஏன் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமானது?

ஒவ்வொரு சிறுதொழில் முயற்சியாளரும் தனது தொழில்முயற்சியினை ஆரம்பிக்கும் போது தனது ஆரம்பகட்ட நுகர்வோர் வலையமைப்பினை விருத்தி செய்வதற்கு பல்வேறு உபாயங்களை கடைப்பிடிப்பது அவசியமாகின்றது. இதற்காக நேரடியாகவும், இணையவழியாகவும் சந்தைப்படுத்தல் மற்றும் உற்பத்தி சமூகமயமாக்கல் (Product Socialization) செயற்பாடுகளை முன்னெடுத்தல் வேண்டும். உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தரமாக இருந்தால் மட்டும் உற்பத்தியினை பெருக்க முடியும் என சிலர் எண்ணக்கூடும். ஆனாலும் பொருளின் தரத்தினை நுகர்வோர் அறிந்து கொள்ள ஆரம்பகட்ட சந்தைப்படுத்தல் என்பது மிக மிக அவசியமானது.

கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடுகையில் டிஜிட்டல் சாதனங்களின் வளர்ச்சி மற்றும் மேம்படுத்தல் காரணமாக டிஜிட்டல் சந்தைப்படுத்தல் எண்ணக்கரு மற்றும் பாவனையானது பல மடங்கு தற்போது அதிகரித்துள்ளது எனலாம். மேலும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஆனது சிறு தொழில் முயற்சியாளர் தனக்கான  சர்வதேச சந்தையினையும் ஏற்றுமதி வாய்ப்பினையும் பெறுவதற்கு மிக மிக அவசியமானது. அத்துடன் டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் இன்னுமொரு சிறப்பம்சமாக சிறு தொழில் முயற்சியாளர் சிறு முதலீடுடன் தமது தொழிற்துறையினை வளர்த்துக் கொள்வதற்கும் உற்பத்திகளின் பரப்பெல்லையினை விரிவுபடுத்துவதற்குமான வாய்ப்பினை ஏற்படுத்துகின்றது. 

இலங்கையில் 14.58 மில்லியன் மக்கள் இணையப் பாவனையில் ஈடுபடுகின்றனர் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது மொத்த மக்கள் தொகையின் 66.7% ஆகும். 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஒரு வருட காலத்தில் 43,000 இணையப் பாவனையாளர்கள் அதிகரித்துள்ளனர். தற்போது 2023 இன் ஆரம்பத்தில் இலங்கையில் முகப்புத்தகத்தினை (Facebook) 6.55 மில்லியன் மக்களும், வலையொளியினை (YouTube) 7.04 மில்லியன் மக்களும், பட வரியினை (Instagram) 1.4 மில்லியன் மக்களும், கீச்சகத்தினை (Twitter) 373,100 மக்களும், புலனம் செயலியை (WhatsApp) 32 மில்லியன் மக்களும் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் - ஜனவரி, 2023

மேற்படி தரவுகள் ஆனவை இணையப் பாவனை மற்றும் சமூக ஊடகங்களின் செல்வாக்கு தொடர்பில் தெளிவானதொரு புரிந்துணர்வினை எமக்கு அளிப்பதாக அமைவதுடன் சிறு தொழில் முயற்சியாளர்கள் டிஜிட்டல் சந்தைப்படுத்தலுக்கு தம்மை இயைபாக்கம் உடையவர்களாக்க வேண்டிய தேவையினையும் வலியுறுத்துவதாக அமைகின்றது எனலாம். 

அந்த வகையில் டிஜிட்டல் எனும் எண்ணக்கரு வாழ்வின் ஓர் அங்கம் ஆகிவிட்ட நிலையில், தொழில் முயற்சியாளர்கள் ஒவ்வொருவரும் தமது தொழில் முயற்சிகளை விரிவுபடுத்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சார் நுட்பங்களை கைக் கொள்வது அத்தியாவசியமானதாகும். அது மட்டுமன்றி தமது ஒவ்வொரு வளர்ச்சிப் பாதையின் படிக்கல்களையும் டிஜிட்டல் ஊடகங்களில் பதித்துவிட்டு செல்வது அவர்களது தொழிற்துறை நிறுவனம் சார்பிலான நம்பகத்தன்மையினை இணையவழி டிஜிட்டல் கொள்வனவாளர்களிடம் ஏற்படுத்துவதாக அமையும். ஒவ்வொரு தொழில் முயற்சியாளரும் டிஜிட்டல் சந்தைப்படுத்தலினை ஒரு வேலைச் சுமையாகக் கருதாது தமது அன்றாடச் செயற்பாடுகளின் ஓர் அங்கமாக கருதும் போதே இதில் வெற்றியடைய முடியும். அது மட்டுமன்றி குறித்த பதிவுகள் சர்வதேச ரீதியிலான வர்த்தக மற்றும் ஏற்றுமதி வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாக அமையும்.


No comments

Powered by Blogger.