உள்ளூர் உற்பத்திகளின் மீதான காதலால் உருவானது - அயம் கலையகம்

பல்வகைமை இனங்களும், கலாச்சாரங்களும் இணையும் மையமாக வவுனியா மண் காணப்படுகின்றது. உள்ளூர் உற்பத்திகளின் மீதான காதலாலும், தமிழ் மீது கொண்ட பற்றினாலும் உருவானது தான் 'அயம்' உள்ளூர் கலைப்பொருட்களின் விற்பனை நிலையம். வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க வளாகத்தில் வவுனியா கலைப்பொருட்களின் களஞ்சியமாகவும், தமிழின் அடையாளமாகவும் தலைநிமிர்நது பலவகைத் தெரிவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நிறுவனமாகத் திகழ்கின்றது 'அயம்' விற்பனை நிலையம்.



நவரத்தினம் அருளானந் எனும் தமிழ் பற்றும் சமூக அக்கறையும் கொண்ட இளைஞரால் இந் நிறுவனம் நிர்வகிக்கப்படுகின்றது.  இன்றைய காலத்தில் நவீன மோகத்தினால் சமூகப்பற்றற்று செயற்படும் இளைஞர்களின் மத்தியில் சமூகப்பற்றோடும், தமிழ் மீது பற்றோடும், உள்ளூர் உற்பத்திகளின் மீதான காதலோடும் பயணிக்கின்றார் அயம் கலையகத்தின் நிறுவுனர் 'அருள்' எனப்படும் திரு. நவரத்தினம் அருளானந்.


கிட்டத்தட்ட 07 வருடங்களுக்கு முன்னர் பனையோலையில் அழைப்பிதழ்களை வழங்கும் முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது சூழலுக்குப் பாதிப்பில்லாத அல்லது சூழல் நேய உற்பத்திகளின் விற்பனைக்கான தளமாக வளர்ந்து வருகின்றது. 
 

ஆரம்பத்தில் பனையோலை அழைப்பிதழ்களை அச்சிட்டு வழங்கி வந்த நிறுவனர் அருள் அவர்கள் வியாபாரப் பெயர் ஒன்று தேவை எனும் அடிப்படையில் 'அயம்' என்னும் பெயர் சூட்டப்பட்டு இன்று வவுனியா நகரின் அடையாளங்களில் ஒன்றாக 'அயம் கலையகம்' விளங்குகின்றது எனலாம்.

மேலும் உள்ளுர்  உற்பத்திகளின் சிறப்பம்சமாக அதன் மூலப்பொருட்கள் குறித்த பிரதேசத்திலேயே பெறப்படுவதனால் குறித்த உற்பத்திச் செயற்பாட்டின் ஊடாக பல்வேறு தரப்பினரும் வருமானத்தையும் அதனோடு இணைந்த வாழ்வாதாரத்தையும் பெற்றுக்கொள்வர். இதனை மையமாக கொண்டு 'அயம்' விற்பனை நிலையம் தமது உற்பத்திகளுக்கு மட்டுமான சந்தைப்படுத்தல் நிலையமாக கொள்ளாது தம்மைப் போன்ற பல்வேறு உள்ளுர் உற்பத்தியாளர்களுடைய உற்பத்திகளுக்கும் சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் களமாக காணப்படுவது இதன் சிறப்பம்சம் ஆகும்.


அயம் விற்பனை நிலையம் வவுனியா மாவட்டம் மட்டுமன்றி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து பிரதேசங்களினதும் உற்பத்திப் பொருட்களுக்கும் விற்பனை வாய்ப்பினை வழங்கி வருகின்றது. மேலும் அன்றாட தமது வாழ்வாதாரம் கருதி மேற்கொள்ளும் பனையோலை சார் உற்பத்திகளான நீத்துப் பெட்டி, இடியப்பத்தட்டு, பன் சார் உற்பத்திகள், பாய், அகப்பை போன்ற பல்வேறு உற்பத்திகளை வழங்கி தமக்கான பணத்தினை உடனே பெற்றுச் செல்வதனை நாம் அயம் நிறுவனத்தினை காணொளி எடுக்கும் போது கண்கூடாக காணக் கூடியமாக இருந்ததுடன் பல்வேறு தரப்பட்ட வாடிக்கையாளர்களும் பலதரப்பட்ட பொருட்களை எந்நேரமும் கொள்வனவு செய்தபடி இருந்தனர்.


அந்த வகையில் வவுனியாவின் ஓர் அடையாளமாக அதேவேளை தம்மோடு பயணிக்கும் தம்மைப் போன்ற தொழில்முயற்சியாளர்களுடைய உற்பத்திகளுக்கு ஒரு விற்பனைத் தளமாக செயற்பட்டு வரும் அயம் விற்பனைத் தளம் போன்ற முயற்சிகள் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு எமது பிரதேசத்தின் மீது எமது உற்பத்திகள் மீது அக்கறை கொண்டவர்கள் எனும் வகையில் நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டியது எமது தார்மீக கடமையாகும்.


நீங்களும் இவ்வாறான எமது பிரதேசத்தினுடைய உற்பத்திகளை கொள்வனவு செய்ய விரும்பின் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு விபரங்கள் கீழே தரப்படுகின்றது.

நிறுவுனர்

நவரத்தினம் அருளானந்

முகவரி

அயம், இந்து இளைஞர் சங்க வளாகம், புகையிரத நிலைய வீதி, வவுனியா.

தொலைபேசி

0771960152 (Whats App Available)


பதிப்புரிமை:  NORTH BRANDS | +94770567256

No comments

Powered by Blogger.